எமோஷன்களை அள்ளிக் கொடுத்த சசிக்குமாரின் காரி.. எப்படி வந்து இருக்கு.. திரைவிமர்சனம்..!!

Advertisements

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இரண்டு கிராமங்களுக்குப் பொதுவான ஒரு கோயிலை நிர்வகிக்கும் பொறுப்புக்குப் போட்டி ஏற்படுகிறது. அதற்காக ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தி அதில் எந்த ஊர் வெல்கிறதோ? அந்த ஊருக்கே கோயில் நிர்வாகம் என்று முடிவாகிறது……

அதுமட்டுமின்றி வறட்சியின் பிடியில் இருக்கும் அந்த கிராமத்தை இராமநாதபுரத்தின் குப்பைத் தொட்டியாக மாற்ற முயலும் அரசாங்கம், அடங்காத காளைகளை அடிமாடாக்கி சுகம் காணும் மாட்டிறைச்சி நிறுவனத்தினரின் ஆணவ வெறி ஆகியனவும் அந்தக் கிராமத்தை மிரட்டுகிறது.

மறுபுறம், சென்னையில் பந்தயக்குதிரை ஓட்டுபவராக அறிமுமாகிறார் சசிகுமார். பின்னால் காளைகளோடு உறவாடுவதற்கான முன்னோட்டமாக அது அமைந்திருக்கிறது. தானுண்டு தன் வேலையுண்டு என வாழும் நேரத்திலும் ஊருக்காக உயிரைவிடவும் துணியும் நேரத்திலும் பொறுப்புடன் நடித்திருக்கிறார் சசிகுமார்.

இன்னொரு புறம் பிரபலமான விலங்குகளை விலைக்கு வாங்கி அதனை ருசித்து சாப்பிடுகிறார் கார்ப்பரேட் வில்லன்.  இந்த மூன்று கதையும் ஒரு இடத்தில் சேர்கிறது, பின்பு என்ன ஆனது என்பதே காரி படத்தின் கதை.

இயக்குனராக அறிமுகமான சசிகுமார் கிராமத்துக் கதைகள் என்றால் நான்தான் நாயகன் என்று நினைவில் கொள்ளும்படி பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.  கடந்த வாரம் சசிகுமார் நடிப்பில் உருவான நான் மிருகமாய் மாற படம் வெளியானதை தொடர்ந்து இந்த வாரம் காரி என்கிற படம் வெளியாகி உள்ளது.

ஹேமந்த் இந்த படத்தை இயக்க   ஆடுகளம் நரேன், பார்வதி அருண், அம்மு அபிராமி, சம்யுக்தா, பிரேம்குமார், ரெடின் கிங்ஸ்லே, பாலாஜி சக்திவேல் என பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இமான் காரி படத்திற்கு இசையமைத்துள்ளார்.சசிகுமாரின் அப்பாவாக வரும் ஆடுகளம் நரேனும் சசிகுமாரின் இணையாக வரும் பார்வதி அருணும் கதையை காவியமாக்குகிறார்கள்.

Advertisements

உன்னை நம்பியிருந்த உயிருக்குத் துரோகம் பண்ணிட்டியேடா? என்று ஆடுகளம் நரேன் பதறுவதும், நான் வருவேன்னு கறுப்பன் நம்பிக்கிட்டிருப்பானே? என்று பார்வதிஅருண் கதறும் காட்சியும் சிலிர்க்க வைக்கின்றன.

சசிகுமாருக்கு என்று எழுதப்பட்ட கதையாக காரி படம் உள்ளது, நீண்ட நாட்களுக்கு பிறகு தனது நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்த சசிகுமார்க்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை கச்சிதமாகவும் பயன்படுத்தி உள்ளார்.  நகைச்சுவைக்கு இடமில்லாத இந்த கதாபாத்திரத்தில் எமோஷனை அள்ளிக் கொடுத்துள்ளார்.

இமானின் இசையில் சாஞ்சிக்கவா பாடல் சுகம்,எங்கும் ஒளி பிறக்குமே பாடல் சிலிர்ப்பு. பின்னணி இசை சிறப்பு. கணேஷ்சந்திராவின் ஒளிப்பதிவில் சென்னை நகர குதிரைகள் போட்டியும் கிராமத்து ஜல்லிக்கட்டு உள்ளிட்ட வாழ்வியலும் உள்ளது உள்ளபடி பதிவாகியிருக்கிறது.காரி காளையைப் பார்க்கும்போதே பெருமிதம் கொள்ள வைத்திருக்கிறார்.

காரி படத்தில் எமோஷனல் காட்சிகள் நன்றாக ஒர்க் ஆகி இருந்தது, குறிப்பாக காளை மாடை வைத்து வரும் காட்சிகள் அனைத்தும் சிறப்பாக இருந்தது. கிளைமாக்ஸ்ல் வரும் ஜல்லிக்கட்டு சம்பந்தமான சீன்களும் சிறப்பாக படமாக்கப்பட்டிருந்தது.

எழுதி இயக்கியிருக்கும் ஹேமந்த், யார் இவர்? என எல்லோரையும் கேட்கவைத்திருக்கிறார். நுட்பமான பல காட்சிகள் மற்றும் வசனங்கள் மூலம் தமிழரின் பெருமைகளைப் பறைசாற்றியிருக்கிறார்.

சாமானிய கிராமத்து மனிதர்களும் அவர்களுடைய சொல்லாட்சி, உடல்மொழி, தோற்றங்கள் ஆகியனவற்றோடு சிறுதெய்வ வழிபாடு அதன் மீதான கிராமத்து மக்களின் அதீத நம்பிக்கைகள் ஆகியனவற்றைப் படத்துக்குப் பலம் சேர்க்கப் பயன்படுத்தியிருக்கிறார்.

Advertisements

Leave a Comment